Tuesday, July 27, 2010

ஏஞ்சலினா சோலி, செனிபர் லோபசின் நீதிக்கானக் குரலும், அசின், சரத்குமாரின் போலி மனிதநேயமும்!


நன்றி: மீனகம் இணையதளம் நடிகர் சரத்குமார் அவர்கள் IIFA விழாவிற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்தே, புறக்கணிப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் பேசத்தொடங்கினார். Headlines Today செய்தி நிறுவனத்தின் IIFA தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட போது, சரத்குமார் பேசியதைக் காணும் யாவரும் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.

இவர் ஏன் இப்படி பேசுகிறார் எனத்தெரியாது குழம்பிய பலருள் நானும் ஒருவன். அதற்கான விடையை, பின்னணியைப் பின்பு அறிய நேர்ந்தது. அதைப் பற்றி பேசுவதற்கு முன் சிங்கள அரசை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதை தூங்குவது போல் நடிக்கும் இவர்களுக்கு விளக்கிவிடுவோம்.
உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பாப் இசை கலைஞரான செனிஃபர் லோபசின் பிறந்தநாள் இம்மாதம் 24 ஆம் நாள். இதை முன்னிட்டு ஒரு கலைநிகழ்ச்சி நடத்துமாறு, அவர் வட சைப்ரசுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் முதலில் அழைப்பை ஏற்றார். இதற்காக அவர் பெற இருந்த தொகை மூன்று மில்லியன் டாலர்கள். அதாவது ரூபாயில் மதிப்பு  13 கோடியே 80 லட்சம். “வட சைப்பரஸ் துருக்கியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மண். அங்கு ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன” என்று கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.  இதைத் தொடர்ந்து அவர் என்ன செய்தார் தெரியுமா? “நான் அறிந்தே மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய எந்த ஒரு அரசையோ, நிறுவனத்தையோ, நாட்டையோ ஆதரிக்க மாட்டேன் என்றும் அப்பகுதியில் உள்ள அரசியல் நிதர்சனங்கள் குறித்து எங்களுக்கு உள்ள புரிதலிலிருந்து எடுக்கப்பட்ட முடிவு இது” என்றும் அறிவித்துவிட்டு அங்கு போக மறுத்தார். இதைத் தான் நாம் இங்குள்ள நடிகர், நடிகைகளிடம் எதிர்பார்க்கின்றோம்.
புறக்கணிப்பின் அவசியத்தை விளக்குவதற்காக மட்டுமே சரத்குமார் அவர்கள் நடித்த திரைப்படத்திலிருந்தே ஒரு உதாரணம் இதோ,
நியாயமாக வழங்கிய தீர்ப்பு தனக்கு எதிராக இருப்பதால்  நாட்டாமையைக் கொன்றதற்கும், ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதற்கும் வில்லனாக நடித்த பொன்னம்பலம் குடும்பத்தை 18 ஆண்டுகள் ஊரை விட்டே தள்ளி வைப்பார் நாட்டாமை. அப்பொழுது நாட்டாமை தனது மகனுக்கு  சொல்லும் முக்கிய அறிவுரை,  “தீர்ப்பு வழங்கும் போது சொந்தம் பந்தம் எதையும் பார்க்க கூடாது. நியாயப்படி செயல்பட வேண்டும்” என்பது. பொன்னம்பலத்தைக் குடும்பத்தோடு ஊரைவிட்டே தள்ளி வைப்பது எனபது, அவரை அவமானப்படுத்தவோ, அவருக்கு அநீதி இழைக்கவோ அல்ல.மாறாக, தான் செய்த தவறை அவர் உணரவேண்டும் என்பதற்கும், அவரோ அல்லது பிறரோ மீண்டும் அந்த தவறைச்  செய்துவிடக் கூடாது என்பதற்கு ஒரு பாடமாகவே பொன்னம்பலம் குடும்பம் புறக்கணிக்கப்பட்டதைத் திரைப்படத்தில் பார்த்தோம். ’ஈழ தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசுக்கு கொடுக்கும் தண்டனை, உலகில் தன் சொந்த மக்களோடு போராடும் மற்ற அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்’ என பாகிசுதானில் இருந்து வெளிவரும் ’”டான்’ (விடியல்)” என்னும் நாளேடு குரல் கொடுத்திருக்கிறது.
இயற்கை சீரழிவால் ஒருநாட்டின் நிதியோ, நிர்வாகத் திறனோ பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் உதவுவது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது ஓர் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. தமிழர்களுக்கு உதவ அந்த நாட்டிடம் பணமோ நிர்வாக வசதியோ இல்லாமலா இருக்கிறார்கள்? போருக்காக பல நூறு கோடி செலவழிக்கும் நாட்டில், புதிதாக பல படைவீரர்களை இணைக்கும் நாட்டில், இவர்கள் சென்றுதான் தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலைமை என்பதை எந்த மடையன் ஏற்றுக்கொள்வான். தமிழர்களுக்கு உதவ இவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் அதே நாடு ஏன் உலகத் தொண்டு நிறுவனங்களையோ, ஐ.நா-வையோ அனுமதிக்க மறுக்கிறது எனும் எளிய காரணத்தைக் கூட உணர மறுக்கின்றார்கள் இவர்கள்.
சரி. இப்போது நிகழ் உலக சரத்குமாருக்கு வருவோம்.
இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இவர் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொண்டு வந்துள்ளார். இவர்கள் குடும்பத்தின் வணிகப்பின்புலனும், இவரின் மனைவி இராதிகா சிங்கள வழித்தோன்றல் என்பதும் முதன்மையான காரணம். சிங்கள அரசின் அறிவிக்கப்படாதத் தூதுவர்களாகச் செயல்படும் இவர்கள், சிங்களப் பேரினவாத அரசுக்கு நற்பெயர் வாங்கப் பாடுபடுவதோடு, நடிகை அசினுக்கு விதிக்கப்படும் தடை, நாளை தங்களுடைய சின்னத்திரை இரேடான் நிறுவனத்திற்கும் வரும் என்பதாலும், அசினுக்கு சார்பாக செயல்படுகிறார். இவருக்குத் துணையாக தன் நடிகர் சங்கத் தலைவர் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் பார்க்கிறார். இதன் மூலம் இவர் அடைய கருதும் நன்மைகள் IIFA வால் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியை வெற்றிமுகமாக்குவது, தமிழ்த்திரையுலகத் தடையைச் செல்லாக்காசாக்குவது, சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது கருணையோடு செயல்படுவதாக உலகிற்கு வெளிப்படுத்தல் எனப் பற்பல.
தொழில்தொடர்பு என்பதையும் மீறி, நினைத்தபோதெல்லாம் வானூர்தி பிடித்து கொழும்பு சென்று சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டில் தங்கும் அளவிற்கு இவர்களுக்கு நெருக்கம் உண்டு. கணவன் மனைவி இருவருமே, நாம் அனைவரும் தெருவில் நின்று கொண்டு  போரை நிறுத்த கோரியிருந்த வேளையிலே, போர் நிறுத்தப்படக் கூடாது எனத் தீவிரமாக வேலை பார்த்தார்கள். மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட உறுப்பினர் ஒருவர் இலங்கை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தன் சங்க நிர்வாகிகளுக்குள் போர் அவலம் குறித்து ஒரு கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்த்திருந்தார். இதை காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் தெரியப்படுத்தி அதை நடக்கவிடாது தடுக்க முயன்றார் சரத்குமார். இதனால் அவருக்கும், சரத்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை திரையுலகமே அறியும் என்றாலும், இம்முறை பல நடிகர்கள் இவரோடு இணையும் அபாயம் உள்ளது. ஏனெனில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இவரைப் பிடியில் வைத்துக்கொள்ள முதல்வர் கருணாநிதியும் முண்டுகொடுப்பதாக தெரிகிறது.
இவர் இப்படியென்றால், இவர் மனைவி இராதிகா, அனைத்துக் கட்சியினரும் தலைமை அமைச்சரைக் கண்டு போரைநிறுத்த முறையிட தில்லிக்கு சென்றபோது, சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சென்றவர்,  நம் அனைவரின் உணர்வுக்கும் எதிராக, ஈழத்தமிழ்கள் கொன்று குவிக்கப்பட்டப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என வாதிட்டவர். இங்கிருந்து போன அனைவரும் போரை நிறுத்தவே கோரிக்கை வைத்ததாகக் கருதிய அப்பாவிகளில் நானும் ஒருவன். திரையுலகம் கொண்டு வந்த  IIFA தடைக்கு எதிராக இவர் செயல்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவருக்கும் நீதி, மனித உரிமைகளைவிடவும், தங்கள் வருவாயே முதன்மையானது. குழம்பியகுட்டையில் மீன்பிடிப்பவர்கள் இவர்கள் என யாரும் கருத வேண்டாம், தேவைபட்டால் குட்டையையும் குழப்பக்கூடியவர்கள். போர் உச்சமடைந்த காலத்தில் நாளும் பல நூறு மக்கள் கொல்லப்பட்ட பொழுதும், மூன்று இலட்சம் மக்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த பொழுதும் மக்களை பற்றி கவலைப்படாத இவர்கள், இன்று தாம் சிங்கள் அரசுடன் உறவாடுவதால் எங்கே தங்கள் திரைப்பட எதிர்காலம் தமிழகத்திலும், புலம் பெயர் தமிழர்களிடத்தும் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்று அஞ்சி சிங்கள அரசின் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அடிமையாக இருக்கும் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யப் புறப்படுகின்றனர்.
இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவது போல் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், சிங்கள அரசு எழுதிக்கொடுக்கும் அறிக்கைகளை ஊடகங்களில் படித்துக் கொண்டும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளிலிருந்து மீட்க நடக்கும்  முயற்சிகளை மழுங்கடித்து,  நீதிக்காகப் போராடி வருபவர்களைக் கோமாளிகளாக உலத்தின் முன்பு நிறுத்த முயல்கின்றனர்.
(வவுனியாவில்இராசபக்சே மனைவியுடன் நடிகை அசின்)
IIFA விழா தோல்வியில் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து, சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகின்றது.  இதைக் கண்டித்தத்   தமிழுணர்வாளர்கள்  சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நேரம் பார்த்து, திட்டமிட்டு இவர்கள் செயல்படுகின்றார்கள். தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையைச் செய்தும், நம் தாயகக் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வரும் நூற்றுக்கணக்கான நம் மீனவர்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகக் கொன்று வரும் இலங்கை அரசின் இனவெறி முகம், டப்ளின் தீர்பாயத்தின் தீர்ப்பு, GSP+ சலுகை இரத்து போன்றவை மூலம் உலக மக்களுக்கு தெரியவரும் வேளையில், மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் இலங்கையை உலகிற்கு அமைதி நிலவும் நாடு என்று சொல்லத் துடிக்கின்றனர் இந்த நடிகர்கள்.
சாதாரணத் தமிழர்கள் காசு கொடுத்து படம் பார்த்ததால் தான்  பணக்காரர்களாகவும், புகழ்மிக்கவர்களாகவும் மாறிப்போன இவர்கள்,  இன்று ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து  நீதிக்கானப் போராட்டத்தை மலிவாக்க முயல்கின்றனர்.
நம்மாலான வரையில் இதுபோன்றவர்களை எச்சரிப்பதோடு, இவர்களின் அனைத்து படங்களையும், தொலைகாட்சித் தொடர்களையும், அனைத்து தளத்திலும் புறக்கணிக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு இங்கு வாழ்வது எளிதல்ல எனப் புரிய வைக்க வேண்டும். அதுவே, இனி சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட இருக்கும் எல்லாத் துறையினருக்கும் பாடமாக அமையும்.
தமிழுணர்வாளர்களை ஆழம்பார்க்கவும், எதிர்ப்புக் குறைவாகவிருந்தால் அதை  பயன்படுத்தவும் பல வழிகளில் வேலை நடக்கின்றது. நாம் விழிப்போடு தொடர்ந்து செயல்பட வேண்டும்.
இறுதியாக சில: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுபவர்களை ஏன் எதிர்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு:
இன்று இவர்கள் உதவி செய்யப் போகும் இடம், வெள்ளத்தினாலோ, பூகம்பத்தினாலோ பாதிக்கப்பட்ட ஒரு இடம் அல்ல. ஆப்பிரிக்க நாடான சூடானில் நடந்ததைப் போல் மிகக் கொடூரமாக, சாட்சியமின்றி நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை நடந்த இடத்திற்கு செல்கின்றனர். இன்று இவர்கள் ஏறி மிதித்தவர்களோடு(சிங்கள அரசோடு) கைகோர்த்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது போல் பாவனை செய்வதற்கு மாறாக , ஐ நா சபையின் சார்பாக ‘குட் வில்’ தூதராக  சூடானில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ  அமெரிக்க நடிகை ஏஞ்சலினா சோலி(சால்ட் பட நாயகி) சூடான் சென்றிருந்தார்.
களத்தில் தங்கி தன்னால் ஆன உதவிகளை அம்மக்களுக்கு செய்து விட்டு அவர் மேலும் ஒரு காரியத்தை செய்தார். “இந்த மக்களுக்கு எதிராக நடந்தது போர் குற்றம், இவர்கள் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை.
இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்று உலக அரங்கில் நீதிக்காக குரல் கொடுத்தார். அவர் வாசிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ‘டார்ஃபர் மக்களுக்கு நீதி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை இச்சுட்டியில் காண்க.
இன்று போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு போகும் சரத்குமார், அசின், சல்மான் கான், விவேக் ஓபராய் அல்லது இனி செல்லவிருக்கும் யாராகட்டும், அங்கு இலங்கையில் குண்டு போட்டு தகர்க்கப்பட்ட பள்ளிக்கூடங்கள், கோயில்கள், எண்ணற்ற மருத்துவமனைகளைப் பார்த்துவிட்டு அங்கு நடந்தது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று நீதிக்காகக் குரல் கொடுப்பார்களா?
’திரைத்துறையினரை மட்டும் ஏன் இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என வற்புறுத்துகிறீர்கள்?’ என்று கேட்பவர்களுக்கு.
திரைத்துறையினர் தவிர விளையாட்டுத்துறை, வணிகத்துறை என்று எல்லோரையும் அணுகி இலங்கை அரசைப் புறக்கணிக்கச் சொல்ல வேண்டும். ஆனால், திரைப்படத்துறைக்கும் மக்களுக்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது. பலப் பத்தாண்டுகளாகத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கும் திரைப்பட மோகம், இதுவரை பல நடிகர்களைத் தமிழகத்தின் பல அரசியல் பதவிகளில் அமர்த்தியுள்ளது.  நாளை கூட புதிதாய் ஒரு நடிகர் தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்துவிட்டு, மக்களுக்கு சமுதாய அக்கறையுடன் சில கருத்துக்களைக் கூறி உதவிகளையும் செய்தால், அவரும் அடுத்த தேர்தலில் நிற்பார். இது தமிழனின் பலவீனமாகக் கூட இருக்கலாம். ஆனால்  இந்த வாய்ப்பு திரைப்படத்துறையினரை தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை.  தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் தமிழன்  முதல் புலம்பெயர்ந்து நாட்டில் அரை கோடி ஊதியம் வாங்கும் தமிழன் வரை தமிழர்களைத் தமிழுடன் இணைய வைப்பதில் தமிழ்த் திரைத்துறை முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் இவர்கள் தங்கள் ஊதியம் குறைவானாலும் ஒவ்வொரு மாதமும் திரைப்படங்களுக்கும் ஒரு தொகையைச் செலவிடுகின்றனர். மக்களுக்கும், தமக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது, விலை பேச முடியாதது என்பதை உணர்ந்தே பல மறைந்த, வாழும் நடிகர்கள் இம்மக்களுக்கு  அநீதி இழைக்கப்படும் பொழுது, “உடுக்கை இழந்தவன் கை போல” ஒற்றுமையுடன் குரல் கொடுக்கின்றனர்.இவர் நமக்காக பேசக் கூடியவர் என்று ஓவ்வொரு வீட்டிலும் காலத்திற்கும் மதிக்கின்றனர் ( நடிகவேள். எம். ஆர்.ராதா,போன்றோர்). நமக்கு அநீதி இழைக்க முயல்பவர்கள் நம் நெஞ்சங்களில் இருந்து மறக்கடிக்கப்படுகின்றனர்.
தமிழினத்தை ஈழத்திலும், தமிழகக் கடற்கரை கிராமங்களிலும் அழித்து வரும் பேரினவாத சிங்கள அரசுடன் கைகோர்க்கச் செல்லும் நடிகர்கள் இதை உணர்ந்து நீதியின் பக்கம் நிற்காவிடில்,  நீதிக்காக மன்றாடிவரும்   தமிழினத்தால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ளட்டும்.
மறத்தமிழன்
தமிழ் நாடு

1 comment:

  1. அருமை! அருமை! அருமையான கட்டுரை! முழுமையான கட்டுரை!

    சேச்சே! சரத்குமாரும் இராதிகாவும் இவ்வளவு இழிவானவர்களா!! நடிகவேள் அவர்கள் எப்பேர்ப்பட்ட தமிழ்ப் பற்றாளர்!! அவருக்கு இப்படி ஒரு மகளா? ராதா அவர்கள் இப்பொழுது இருந்திருந்தால் மகளைச் சுட்டுத் தள்ளியிருப்பார்.

    ReplyDelete